துபாய் நாட்டில் வேலை தேடி அலைபவர்களுக்கு இலவச உணவு…

வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வது நாம் அறிந்த ஒன்று. அதன் எதிரொலி வெளிநாடுகளை நோக்கிய நம்முடைய பயணம் தொடர்ந்து கொண்டே செல்கிறது. அதில் ஒரு கூட்டம் துபாய் நாட்டை நோக்கி செல்லுகின்றது.

துபாய் நாட்டில் சிலிக்கான் ஓயஸீஸ் எனும் பகுதியில் இயங்கும் தி கபாப் ஷாப் எனும் உணவகம் வேலையின்றி வேலை தேடி அலைபவர்களுக்கு உதவும் உயரிய நோக்கத்துடன் இலவசமாக உணவை பரிமாறி வருகின்றது. இந்த உணவை சாப்பிடுவதற்காக நீங்கள் சங்கோஜப்பட வேண்டாம் உங்களால் முடியும் போது முடிந்ததை திருப்பித் தாருங்கள், முடியாவிட்டாலும் பரவாயில்லை எனக்கூறுகிறார் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட கனடிய உரிமையாளர் கமால் ரிஜ்வி. அவர் உணவகம் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையும் அதையே தான் தெரிவிக்கின்றது.

காசு கொடுத்து உணவருந்துபவர்களுக்கும் இலவசமாக உணவு அருந்துபவர்களுக்கும் இடையில் எத்தகைய பாரபட்சமும் காட்டப்படாது மேலும் அங்குள்ள பணியாளர்களும் உங்களை கீழ்த்தரமாக நடத்த மாட்டார் என உறுதி கூறுகின்றார் கமால் ரிஜ்வி. அதேபோல் நீங்கள் வேலையின்றி வேலை தேடி வருபவர் தான் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் கேட்பதுமில்லை. காசு கொடுக்க இயலாதவர்கள் குறிப்பிட்ட அந்த விளம்பரப் பலகையை அமைதியாக சுட்டிக்காட்டினாலேயே போதும் வேறு எதுவும் கேட்கவும் மாட்டார்கள். இந்த உயரிய நோக்கம் அந்நாட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.