பொதக்குடி 150 சவரன் திருட்டு – 5 பேர் பிடிபட்டனர். யார் அவர்கள்.?

பொதக்குடியை சேர்ந்தவர் தமீம் அன்சாரி இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துகொண்டு இருக்கிறார். இவரின் மனைவி மற்றும் மகள் இருவரும் பொதக்குடியில் உள்ள அவர்களது வீட்டில் வசித்து வருகின்றனர்.

5 பேர் கொண்ட மர்ம கும்பல் கார் வாங்குவது போல் உள்ளே புகுந்ததாக கூறப்படுகிறது. 3 பேர் உள்ளே புகுந்து இருவரையும் கட்டிப்போட்டு துப்பாக்கி முனையில் மிரட்டி பீரோவில் இருந்த 150 சவரன் மற்றும் 1 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தொடர்பாக நாம் முன்னரே பதிவு செய்திருந்தோம்.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக கூத்தாநல்லூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் உத்தர விட்டார்.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் நகை, பணத்துடன் காரில் தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து பொதக்குடி, அத்திக்கடை, லெட்சுமாங்குடி, கொரடாச்சேரி, நீடாமங்கலம் உள்ளிட்ட இடங்களில் வீடுகள், கடைகள் முன்பாக பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர்.

இதில் திருட்டு கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் அடையாளம் கண்டு கொண்டனர். இவர்களில் 2 பேர் பொதக்குடியை சேர்ந்தவர்கள். 3 பேர் வெளியூரை சேர்ந்தவர்கள். இவர்கள் 5 பேரையும் போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

யார் இவர்கள்? இந்த சம்பவத்திற்கு உதவியாக இருந்தவர்கள் யார்? இவர்களுக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி? கொள்ளையடித்த பணம், நகை எங்கு உள்ளது? என்பது போன்ற விவரங்கள் குறித்து போலீசார் கொள்ளையர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.