திருத்துறைப்பூண்டியில் கோர சம்பவம்…

திருத்துறைப்பூண்டி அருகே மூதாட்டி கற்பழித்து கொலை சம்பவம் தொடர்பாக லாரி கிளீனர் கைது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலவடபாதி பிச்சன்கோட்டகத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மனைவி சரோஜா(வயது 60). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் நடந்து தனித்தனியே வசித்து வருகிறார்கள். பக்கிரிசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சரோஜா மட்டும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவர் தனது வருமானத்துக்காக திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 29-ந் தேதி திருத்துறைப்பூண்டியில் உள்ள கடைக்கு வேலை சென்ற சரோஜா வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரை அக்கம், பக்கத்தினர் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. மறுநாள் இரவு வடபாதி ரெயில்வே கேட் அருகில் உள்ள வயலில் ஆடைகள் களையப்பட்டு அழுகிய நிலையில் முகத்தை சேற்றில் வைத்து அமுக்கி கொலை செய்யப்பட்டு சரோஜா பிணமாக கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரோஜாவின் உடலை கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சரோஜாவை கொலை செய்த கொலையாளிகளை தேடி வந்தனர். ஆனால் கொலையாளிகள் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் தனிப்படை அமைத்து கொலையாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். இந்த நிலையில் பிச்சன்கோட்டகம் மேலவடபாதி கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரியிடம், மேலவடபாதி பிச்சன்கோட்டகம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பார்த்திபன்(20) என்பவர் சரண் அடைந்து சரோஜாவை தான் கொலை செய்ததாக கூறினார்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரி, திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் பார்த்திபனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

போலீசாரிடம் பார்த்திபன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, நான்(பார்த்திபன்) லாரி கிளனராக வேலை செய்து வருகிறேன். எனக்கு குடிப் பழக்கம் உள்ளதால் தினமும் மது குடித்து விட்டு வடபாதி ரெயில்வே கேட் அருகே நிற்பேன். அப்போது இரவு 9 மணியளவில் சரோஜா அந்த வழியாக ஓட்டல் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வருவார். வயதானாலும் சரோஜா இளமையாக எனக்கு தெரிந்தார். எனவே அவருடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டேன்.

இதை நான் சரோஜாவிடம் நேரடியாக தெரிவித்தேன். அப்போது அவர் என்னை திட்டி அனுப்பினார். இருப்பினும் சரோஜா மீதான எனது ஆசை தீரவில்லை. சம்பவத்தன்று நான் வடபாதி ரெயில்வே கேட் அருகே நின்று கொண்டிருந்தேன். அப்போது அந்த வழியாக சரோஜா வந்தார்.

அவரை நான் பின் தொடர்ந்து சென்று எனது ஆசையை கூறினேன். அப்போதும் சரோஜா எனது ஆசைக்கு இணங்கவில்லை. இதனால் அவரை கீழே தள்ளினேன். இதில் தலையில் அடிபட்ட சரோஜா மயங்கி விழுந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நான் சரோஜாவை கற்பழித்தேன். இந்த சம்பவத்தை சரோஜா யாரிடமாவது கூறி விடுவாரோ என பயந்த நான் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.

இதனையடுத்து அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை தூக்கி சென்று வயலில் வீசினேன். பின்னர் அவர் உயிர் பிழைத்து விடுவாரோ என்ற சந்தேகத்தில் சரோஜாவின் தலையை பிடித்து சேற்றில் அழுத்தி அவரது சாவை உறுதி செய்தேன். பின்னர் ஒன்றும் தெரியாதது போல ஊருக்குள் சென்று விட்டேன். சில நாட்கள் கழித்த பின் போலீசார் என்னை பிடித்து விடுவார்களோ என பயந்தேன். இதனால் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தேன்.

இவ்வாறு போலீசாரிடம் பார்த்திபன் வாக்குமூலம் அளித்துள்ளார். பார்த்திபனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 60 வயது மூதாட்டியை 20 வயது வாலிபர் கற்பழித்து கொன்ற சம்பவம் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.