முத்துப்பேட்டையில் நிவாரண பணி சேவை செய்வோருக்கும் மற்றும் பொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கஜா புயலினால் ஏற்பட்ட சேதம் மிக அதிகம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதனால் பல தன்னார்வலர்கள், இயக்கங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அடிப்படை தேவைகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறார்கள்.

இதனால் பல பொதுமக்கள் பயன்பெற்றாலும், முத்துப்பேட்டையை சேர்ந்த சில பொதுமக்கள் இதுவரை எந்த நிவார பொருட்களும் எங்கள் பகுதிக்கு (காலகேனி தெரு அதனை சுற்றி உள்ள பகுதி) வரவில்லை என்று எங்கள் நிருபர்களிடம் கவலையுடன் தெரிவித்தனர்.

நிவாரண பணி சேவை செய்வோருக்கு ஒரு வேண்டுகோள்:

முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிவாரண மற்றும் சேவை பணியில் ஈடுபடுவோர் தயவு செய்து ஒன்றிணைத்து செயல்படுங்கள். நீங்கள் ஒன்றிணைத்து மற்றும் திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே நிவாரண பொருட்கள் அனைத்தும் எல்லா மக்களையும் சென்றடையும். இல்லையென்றால், குறிப்பிட்ட ஒரு தெருவுக்கோ அல்லது ஒரு பகுதிக்கே தான் மீண்டும் மீண்டும் செல்லும். இதனால், சில பகுதி வஞ்சிக்கப்படும்.

பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்:

நிவாரண பொருட்கள் கிடைக்கப்பெரும்போது உங்களுக்கு ஓரிரு நாட்களுக்கு தேவையான பொருட்களை மட்டும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒரே நிவாரண பொருட்களை பல இயக்கங்களோ அல்லது வேறு தன்னார்வலர்களோ தரும்போது தவிர்த்து விடுங்கள். ஏனென்றால், பல வீடுகளில் நிவாரண பொருட்கள் கிடைக்காமல் பல பொதுமக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்காக பல மாவட்டங்களில் இருந்து வரும் நிவாரண பொருட்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நம் சகோதரர்கள் அனுப்பும் நிவாரண உதவியும் தொடர்ந்து உங்களை வந்து சேரும். ஆதலால் நிவாரணப்பொருட்கள் அனைத்து மக்களுக்கும் சமமாக சென்றடைய பொதுமக்களாகிய உங்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியமானது.