முத்துப்பேட்டை அடுத்த உப்பூரில் அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் மக்கள்.!

முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமம் காலனி தெருவில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் இல்லை:

இங்கு பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்ட் சாலை தற்பொழுது சாலையே இல்லாதளவில் சேதமாகி குண்டும் குழியுமாக உள்ளது. அதேபோல், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அணைத்து அடிப்படை வசதிகளும் இல்லாததால் ஆதிகாலத்தில் வாழ்வது போல் இப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும், அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு வீடுகள் முற்றிலும் சேதமாகி உள்ளது.

எந்த சீரமைப்பு பணியும் இல்லை:

இந்நிலையில், சமீபத்தில் வீசிய கஜா புயலால் இப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது பெய்த மழை நீர் இன்னும் சாலை நெடுகிலும் தேங்கி கிடக்கிறது. சிலரது வீட்டிற்கு உள்ளே கூட தண்ணீர் புகுந்து தேங்கி கிடக்கிறது. ஆனால், இதுநாள் வரை கஜா புயல் பாதித்த எங்கள் பகுதியில் எந்தவித சீரமைப்பு பணியும் நடைபெறவில்லை.

பொதுமக்கள் ஏக்கம்:

இதனால், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதன் மூலம் தோற்று நோய் பரவும் வாய்ப்புகளும் அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் கஜா புயலால் பாதித்த இப்பகுதி மக்களுக்கு இதுவரை அரசு நிவாரணமும், தொண்டு நிறுவனங்கள் வழங்கும் நிவாரணமும் இதுநாள் வரை கிடைக்கவில்லை. யாராவது எங்களுக்கு உதவி செய்வார்களா? என்று ஏக்கத்தில் இந்த மக்கள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், சில தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள் கொண்டு வரும் நிவாரண பொருட்களை சாலையில் சிலர் வழிமறித்து வேறு பகுதிக்கு கொண்டு சென்று விடுகின்றனர். அதனால், எங்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகள் கூட தடைப்படுகிறது. எனவே, அரசு இப்பகுதியை சீரமைத்து தரவும் மற்றும் உரிய இழப்பீட்டை தர வேண்டும் என்றனர்.