புயல் பாதித்த 4 மாவட்டங்களில் நிவாரண பணிகளில் 3.72 லட்சம் பணியாளர்கள்.!

புயல்பாதித்த 4 மாவட்டங்களில் நிவாரண பணிகளில் 3.72 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர் என்று அமைச்சர் வேலுமணி கூறினார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட நாகை சாலை மீனாட்சிவாய்க்கால் பகுதிகளில் நடைபெற்று வரும் துப்பரவு பணிகளை அமைச்சர்கள் காமராஜ், வேலுமணி, செல்லூர் ராஜு பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் வேலுமணி கூறியதாவது:- உள்ளாட்சி துறை சார்பாக 4 மாவட்டங்களில் ஜேசிபி, லாரி, குடிநீர் லாரிகள், ஹிட்டாச்சி வாகனங்கள், ட்ராக்டர்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஆயில் இன்ஜின்கள், ஜெனெரேட்டர்கள், மினிமோட்டர்கள், டார்ச் லைட் உள்ளிட்டவற்றை கொண்டு 21,888 பணியாளர்கள் மூலம் வேகமாக நிவாரண பணிகள் மேற்கொண்டு வரப்படுகிறது.

கூடுதலாக நான்கு மாவட்டங்களிலும் நூறு நாள் வேலைதிட்டத்தின் கீழ் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, மாவட்டங்களில் 3,72,113 பேரை கொண்டு நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.

மின் துறை சார்பில் பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் வேலைபார்த்து வருகிறார்கள். புயல்பாதித்த 4 மாவட்டங்களில் நிவாரண பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.