கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார் சரத்குமார்.!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் சேதுபவாசத்திரம், பேராவூரணி பகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று(30.11.2018) பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர் மதுக்கூர், பட்டுக்கோட்டை, துறவிக்காடு, ஒட்டங்காடு, பேராவூரணி, ஆதனூர், பாங்கிராங்கொல்லை, பெருமகளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பார்வையிட்டார். பின்னர் பொதுமக்கள், விவசாயிகளுக்கு ஆறுதல் கூறியதுடன் நிவாரண உதவிகளை வழங்கினார்.

அப்போது ஆங்காங்கே இருந்த பொதுமக்கள் தங்களின் பாதிப்புகளை கண்ணீர் மல்க கூறினார். இதைத்தொடர்ந்து சரத்குமார் நிருபர்களிடம் கூறும்போது: கஜா புயலால் பாதித்த பகுதிகளை அமைச்சர்கள் பார்வையிடவில்லை என்ற குறைபாடு உள்ளது. இதை போக்க வேண்டும் மற்றும் அடிப்படை கட்டமைப்பை மேன்படுத்த வேண்டும் என்றார்.

இதையடுத்து பட்டுக்கோட்டை அடுத்த சூரப்பள்ளம் கிராமத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட தென்னந்தோப்புகளை சமக தலைவர் சரத்குமார் பார்வையிட்டார். மேலும், விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து ஆறுதல் கூறியதுடன் அதே கிராமத்தில் 150 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.