முத்துப்பேட்டையில் மது விற்றவர்கள் கைது…!

முத்துப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கஜா புயல் தாக்கத்திற்கு பின்னர் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை அதிகரித்துள்ளது. இதனை ஒழிக்கும் விதமாக முத்துப்பேட்டை போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முத்துப்பேட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பழைய பஸ் நிலையத்தில் சந்தேகம் படும் வகையில் சாக்கு மூட்டையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள செங்கப்படுத்தான்காட்டை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 33) என்பதும், புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை சாக்கு மூட்டையில் வைத்து கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல தில்லைவிளாகம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு மதுபாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் (32), தில்லைவிளாகம் கீழக்கரையை சேர்ந்த முத்து (46), பேட்டை பகுதியில் மதுபாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (44) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 65 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.