முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டையில் கடனை செலுத்த அவகாசம் கேட்டதர்க்கு நிதி நிறுவனம் மிரட்டல்.!

முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டையில் கடன் தொகையை திருப்பிச் செலுத்த கால அவகாசம் கேட்டவர்களுக்கு மிரட்டல் விடுத்த தனியார் நிதி நிறுவன ஊழியரை மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் முற்றுகையிட்டு சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கிழக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் கடனுதவி அளித்து வாரம் மற்றும் மாதாந்திர வசூல் நடத்தி வருகிறது.

இதில், நூற்றுக்கணக்கான பெண்கள் கடனுதவி பெற்று முறையாக செலுத்தி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடு வாசலை இழந்து, அரசின் நிவாரண உதவிக்காக சுய உதவிக்குழுவினர் காத்திருக்கின்றனர். இதனால் கடன் தொகையை கட்ட இயலாத பெண்கள் நிதி நிறுவங்களுக்கு மனு அனுப்பினர். அதில், கஜா புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் எங்களது கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அதை கண்டுகொள்ளாத நிதி நிறுவனங்கள் வசூலில் கறாறாக செயல்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் தமிழக முதலைமைச்சர், அமைச்சர்கள், மாவட்ட கலக்டர் மற்றும் அதிகாரிகளுக்கும் மனு அனுப்பினர். ஆனால் அரசு சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில் தனியார் நிதி நிறுவன ஊழியர் தம்பிக்கோட்டை பகுதிக்கு வசூலுக்கு வந்தார்.

அப்போது பெண்கள் எவ்வளவோ நிலமையை எடுத்துக்கூறியும் கடன் தவணை தொகையை கட்டாவிட்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட நடவடிக்கை எடுத்து கடன் தொகை முழுவதும் வசூலிக்கப்படும் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த 80க்கும் மேற்பட்ட பெண்கள் நிதி நிறுவன ஊழியரை முற்றுகையிட்டு சிறைபிடித்தனர். அந்த ஊழியரிடம் தங்களது நிலமையை எடுத்துகூறி வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் கடனை திருப்பி செலுத்த 6 மாத கால அவகாசம் தருவதாக நிதி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் நிம்மதியடைந்த பெண்கள் நிதி நிறுவன ஊழியரை விடுவித்துவிட்டு, கடனை 6 மாத கால அவகாசத்தில் பணம் செலுத்துவதாக எழுதியும் கொடுத்தனர்.

இதுகுறித்து மகளிர் குழுவை சேர்ந்த பெண்கள் கூறுகையில்: சமீபத்தில் வீசிய கஜா புயலால் எங்களது வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகிறோம். நாங்கள் கடன் பெற்ற தொகையை செலுத்த முடியாது என்று கூறவில்லை, கால அவகாசம் தான் கேக்கிறோம். ஆனால், நிதி நிறுவனங்கள் மிரட்டும் தோரனையில் பேசுகின்றனர். எனவே தான் இன்று வந்தவர்களிடம் முறையிட்டோம் கால அவகாசம் தந்துள்ளனர். இதுபோன்று மற்ற வங்கிகளும் அவகாசம் கொடுக்கவேண்டும் இல்லையேல் இப்பகுதி பெண்கள் தற்கொலை செய்யக்கூட தயங்க மாட்டார்கள் என்றனர்.