கஜா புயல் பாதிப்பால் தேங்காய் விலை கடும் வீழ்ச்சி. விவசாயிகள் வேதனை.!

கஜா புயல் பாதிப்பால் தேங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. இது தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் மூன்றாவது உழவர் சந்தை ஆகும். இங்கு வேதாரண்யம் தாலுகாவிலிருந்து கொண்டு வரப்பட்ட நாட்டு காய்கறிகள் விற்கப்படும். இந்த உழவர் சந்தையில் தினந்தோறும் 50 முதல் 80 கடைகள் வரை இருக்கும்.

கஜா புயலில் உழவர் சந்தையும் அதிக சேதம் ஏற்பட்டு, தற்போது சீரமைப்பு பனி நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் தாலுகாவில் புயலால் காய்கறிகள் உற்பத்தி அழிந்து போனதால் காய்கறிகள் வருவதில்லை. புயலால் பல பகுதிகளில் தென்னை மரங்களும் சாய்ந்ததால் தேங்காய்கள் அனைத்தும் விழுந்து கிடப்பதால் தேங்காய் மட்டும் வியாபாரிகள் வாங்கி கொண்டும் உள்ளூர் சந்தைக்கு விற்பனைக்கு வைத்துள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக தேங்காய் மட்டும் விற்பனைக்கு வருகிறது. புயலுக்கு முன் தேங்காய் ரூ.15 முதல் 20 வரை விற்றது. ஆனால், தற்போது ரூ.10 அல்லது 12க்கு கூட தேங்காய் வாங்க யாரும் முன்வருவதில்லை. இந்த தேங்காய் விற்பனைக்கூட இன்னும் 10 நாட்களுக்குத்தான் வரும். அதன் பிறகு, தேங்காய் விற்பனைக்கு வராது என்றும் பொங்கல் பண்டிகையின்போது தேங்காய் வெளி மாவட்டத்திலிருந்து தான் கொண்டு வந்து அதிகவிலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை வரும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.