மக்கள் தீராத துயரத்தில் இருக்கும் போது இப்படியும் சில திருடர்கள்…

முத்துப்பேட்டை அருகே கஜா புயலால் சாய்ந்த மரங்களை வெட்டி கடத்த முயன்றபோது போலீஸார் பறிமுதல்.

முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலையோரங்களிலும் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ஏராளமான மரங்கள் வேரோடு கீழே விழுந்தன. அரசுக்கு சொந்தமான மரங்களை சட்டத்திற்கு புறம்பாக சிலர் வெட்டி கடத்தி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இந்நிலையில் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் சங்கேந்தியில் கோட்டூர் செல்லும் சாலையில் சிலர் தேக்கு மரங்களை வெட்டி கடத்திவது தெரிய வந்ததை அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் போலீஸாரிடம் புகார் அளித்தார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து அவர்களிடம் இருந்த மரங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்று முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து சிலர் மரம் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முருகையன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.