கஜா புயலால் சாய்ந்த மரங்களுக்கு மறுவாழ்வு அளித்த முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி நிர்வாகம்.!

“இயற்கை பேரிடரால் நாங்கள் சாய்ந்தால் எங்களை வெட்டிவிடாதீர்கள் நிமிர்த்தி நட்டு மீண்டும் வாழ ஒரு வாய்ப்பு தாருங்கள்… – இப்படிக்கு வெட்டி அளிக்கப்பட்ட மரங்கன்” என முத்துப்பேட்டையில் உள்ள ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்த வாசகம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளியின் இயற்கை வளம்:

முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி நிர்வாகம் பள்ளி வளாகம் முழுவதும் விதவிதமான அறிய வகை மரங்கன் உட்பட்ட நூற்றுக்கணக்கான மரங்களை வளர்த்து வந்தது. இதனால், பள்ளி வளாகம் பசுமைக் கண்ட சோலை வனமாக காட்சியளித்தது. மேலும், பள்ளி நிர்வாகம் மாணவிகளுக்கும் மரங்களை பாதுகாப்பதிலும், வளர்ப்பதிலும் ஆர்வத்தை தூண்டி கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர். இதனால், இங்கு படிக்கும் மாணவிகளும் மரங்கள் மீது ஆர்வம் பற்றுக் கொண்டு இயற்கை சூழலுடன் படிப்பை தொடர்ந்து வந்தனர்.

கஜா புயலால் ஏற்பட்ட சீரழிவு:

ஆனால், சமீபத்தில் வீசிய கஜா புயல் இந்த மரங்களையும் விட்டு வைக்கவில்லை. கடந்த 20 வருடங்களாக பார்த்து பார்த்து வளர்ந்துவந்த மரங்கள் அனைத்தும் சாய்ந்தது. பள்ளி வளாகம் முழுவதும் மரங்கன் சின்னாபின்னமாகி அலங்கோலமாக பார்ப்பவர்கள் மனதை உருக்கும் அளவில் காட்சியளித்தது.

பள்ளி மாணவிகள் வேதனையுடன் கண்ணீர்:

சகஜ நிலைக்கு திரும்பிய பின்னர் திறக்கப்பட்ட பள்ளிக்கு வந்த மாணவிகள் “சோலைவனமாக இருந்த இடம் இப்படி உள்ளதே” என்று இந்த காட்சியை பார்த்து வேதனையுடன் கண்ணீர் வடித்தனர். இதனை கண்டு பள்ளி நிர்வாகமும் நிலைகுலைந்தது.

பள்ளி தாளாளரின் அறிவுறுத்தலும், மீட்பு பணியும்:

பள்ளி நிலையை கேள்விப்பட்டு வெளிநாட்டில் இருந்த பள்ளியின் தாளாளர் “முஹம்மது முஸ்தபா” உடனே சாய்ந்து கிடக்கும் அனைத்து மரங்களையும் வெட்டி அழித்துவிடாமல் மீண்டும் அதே இடத்தில் நடுமாறு அறிவுறுத்தினார். இதனையடுத்து, பள்ளி நிர்வாகம் அந்த பணியை மும்முரபாக செயல்படுத்தியது.

இதுகுறித்து பள்ளியின் மாணவிகள் பரக்கத் நிஷா, சைமா பானு, அப்ரா ஆகியோர் கூறுகையில்: “இயற்கை பேரிடரால் நாங்கள் சாய்ந்தால் எங்களை வெட்டிவிடாதீர்கள் நிமிர்த்தி நட்டு மீண்டும் வாழ ஒரு வாய்ப்பு தாருங்கள்..” என்ற வாசகம் எங்களுக்கு மட்டுமல்ல அனைத்து மாணவிகளையும் கவர்ந்த வாசகம். இந்த வாசகம் மூலம் எந்த அளவிற்கு மரங்கள் மீது பற்றுக்கொண்டவர்கள் பள்ளி நிர்வாகத்தினர் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் பள்ளி வந்து பார்த்ததும் அதிர்ச்சியில் தானாகவே கண்ணீர் வந்தது.

அதேபோல், இங்குள்ள வாசகம் கூறியபடி எங்கள் பள்ளி நிர்வாகம் மீண்டும் இந்த மரங்களை உயிருக்கு கொண்டு வர செய்துள்ள முயற்சி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இதற்கு எங்கள் பள்ளி தாளாளர், முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.

மாணவிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி:

ரஹ்மத் பள்ளி நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு மாணவிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.