சாலை வசதி இல்லாததால் சடலத்தை வயலுக்குள் எடுத்து சென்ற அவலம்…

வலங்கைமான் அருகே கிராமத்தில் மயானத்துக்கு செல்லும் வழி பராமரிப்பு இன்றி நீண்ட காலமாக மணல் சாலையாக உள்ளது. இந்த பாதை வெயில் காலங்களில் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வருகிறது. மழை காலங்களில் இந்த வழி பயன்படுத்த முடியாத சூழல் இருந்து வருகிறது. அதன்காரணமாக மயானத்துக்கு செல்லும் சாலை போக்குவரத்திற்கும், பாதசாரிகள் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு மோசமாக இருந்து வருகிறது.

இப்படி பல இன்னல்கள் இருக்கும் அப்பகுதியில் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரை மயானத்துக்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லாததால் அவரது உடலை பாடையில் வைத்து உறவினர்கள், சம்பா நடவு செய்யப்பட்ட வயல் வழியாக மயானத்திற்கு எடுத்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த அவலநிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே மயானத்திற்கு செல்ல சாலை சரி செய்ய வேண்டும் மேலும் இது போன்ற அவலங்கள் தொடர்ந்து நடக்காமல் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.