கோட்டூர் அருகே பைக்கில் சென்ற ஒருவர் பலி.!

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள கோமளப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிவபுண்ணியம்(40). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கு கழக மன்னார்குடி டெப்போவில் நடத்துனராக வேலை பார்த்து வந்தார். இவரின் மனைவி பாசமலர்(32).

இந்நிலையில் சிவபுண்ணியம் ஒரு பைக்கிலும், இவரின் மனைவி பாசமலர் தனது சகோதரருடன் ஒரு பைக்கிலும் கோமலைப்பேட்டையில் இருந்து வடபாதிமங்கலத்தில் நடந்த தனது உறவினர் ஒருவரின் படத்திறப்பு விழாவிற்கு சென்றுவிட்டு ஊர் திரும்பினார். அப்போது கோட்டூர் அருகே உள்ள நெருஞ்சினக்குடி கிராமத்தின் அருகே பைக்கில் வந்த சிவபுண்ணியத்தை காணாததை கண்டு அவரின் மைத்துனர் தனது பைக்கை வந்த வழியே திருப்பி வந்துள்ளார். அப்போது நெருஞ்சினக்குடி கிராமத்திற்கு முன் சாலையோரத்தில் இருந்த வாய்க்காலில் தலையில் பலத்த காயத்துடன் சிவபுண்ணியம் விழுந்து கிடந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிவபுண்ணியத்தின் மைத்துனர் மற்றும் அவரது மனைவி, சிவபுண்ணியத்தை மீட்டு ஆதிச்சபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சேர்ந்தனர். பின்னர் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் சிவபுண்ணியத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.