புதிதாக நடப்பட்ட மின்கம்பம் முறிந்து விழுந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி.!

முத்துப்பேட்டையில் கஜா புயலின் தாக்கத்தால் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இதனால் மின்சார சீரமைப்பு பணிக்காக கூடுதலாக மின் ஊழியர்களை பல மாவட்டங்களில் இருந்து வரவழைத்து வேலைகள் துரிதமாக நடந்துவந்தது. ஒரு சில பகுதிகளுக்கு மின்சாரம் கிடைக்கப்பெற்றாலும் இன்னும் தற்போது வரை மின்சாரமே எட்டிப்பார்க்காத கிராமங்கள் முத்துப்பேட்டையில் இருக்கிறது.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் தெற்கு பள்ளியமேடு இந்திரா நகர் பகுதியில் மின் சீரமைப்பு பணிகள் விழுப்புரம் பகுதியை சேர்ந்த மின் செயற்பொறியாளர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பணியாளர்களால் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வந்தது. நேற்று இந்திரா நகர் மரைக்கோரையாற்று ஓரம் பழைய மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் ஊன்றப்பட்டது. மேலும், நடப்பட்ட மின்கம்பத்தில் மேல்புறம் கம்பிகளை இணைக்கும் ஆங்கிள்களை அமைத்துவிட்டு பணியாளர் ஒருவர் கீழே இறங்கினார். பின்னர் மற்றொரு மின்கம்பத்திலிருந்து மின்கம்பிகள் இழுத்து கட்டும் பணியின் போது தீடிரென்று நடப்பட்ட புதிய மின்கம்பம் முறிந்து அருகே இருந்த பாலா இன்பவரது வீட்டு முன்பக்க சுவர் மீது விழுந்தது. இதில் சுவர் உடைந்து சேதமாகியதுடன் அந்த நேரத்தில் யாரும் அருகே இல்லாதால் உயிர் சேதங்கள் எதுவும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மின் பணியாளர்கள் துவங்கிய பணியை அப்படியே விட்டுவிட்டு திரும்பி சென்றனர்.

எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான மின்கம்பங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.