கஜா புயலால் வீட்டை இழந்த தாயில்லா மாணவிகளுக்கு புதிய வீடு கட்டி கொடுத்த முகநூல் நண்பர்கள்.!

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மேலகண்டமங்கலம் சேர்ந்தவர் ராஜிவ்காந்தி(40). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி(32) கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

இவர்களுக்கு விசோனியா(12), வினிதா(11) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படித்து வருகின்றனர். மேலும், ராஜிவ்காந்தி தனது இரண்டு பெண்குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் வீசிய கஜா புயலால் இவர்களின் வீடு முற்றிலும் சேதமடைந்தது. ஏற்கனவே வறுமையில் வசித்து வந்த மாணவிகள் தங்க இடமின்றி இடிந்த கூரை வீட்டின் ஓரத்திலேயே வசித்து வந்தனர். குடும்பத்தை கவனிக்க வேண்டிய மாணவிகளின் தந்தையோ தினமும் மது அருந்திவிட்டு தனது குழந்தைகளை கவனிக்காமல் சுற்றித்திரிந்தார். மேலும், இவர்களின் சோகத்தை எந்த ஒரு அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. ஏழ்மை நிலையில் இருந்தாலும் இந்த மாணவிகள் படிப்பில் புலி.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவர்களின் பள்ளிகள் இயங்க துவங்கியது. கவலைகள் ஒருபுறம் இருந்தாலும் பள்ளிக்கு சென்றால் ஒருவேளை மதிய உணவாவது கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் பள்ளிக்கு சென்றுள்ளனர். மாணவிகள் இருவரின் முகங்களும் சோகமாக இருப்பதை கண்ட அப்பள்ளியின் ஆசிரியர் மணிகணேசன் அதுகுறித்து மாணவிகளிடம் விசாரித்துள்ளார். அப்போது இரு மாணவிகளும் தங்களின் வேதனையை கண்ணீருடன் கூறினர். இதனை கேட்டு கண்கலங்கிய ஆசிரியர் மணிகணேசன் உடனடியாக தனது முகநூல் பக்கத்தில் மாணவிகளின் நிலைமையை பதிவிட்டுள்ளார். அதனை முகநூலில் பார்த்த பலரும் வார்த்தைகளால் மட்டுமே ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல மோட்டர் கம்பெனியில் வேலை பார்க்கும் 6 நண்பர்கள் இந்த பதிவை இணைந்து பகிர்ந்துள்ளார்கள். அப்போது இந்த பதிவு காக்கைகள் நண்பர் குழு என்ற பெயரில் முகநூலில் இயங்கிவந்த அவர்களிடம் மாணவிகள் குறித்தான ஆசிரியர் மணிகணேசனின் பதிவு சென்றடைந்துள்ளது. பின்னர் மணிகணேசனை தொடர்பு கொண்ட அவர்கள் மேலகண்டமங்கலம் கிராமத்திற்கு உடனடியாக நேரில் வந்து மாணவிகளின் இடிந்த கூரை வீட்டை அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் ரூ.50 ஆயிரம் மதிப்பில் 10 நாட்களுக்குள் எளிமையான வீடு ஒன்றை கட்டி கொடுத்தனர்.

இது பற்றி உங்கள் கருத்தை மறக்காமல் பதிவு செய்யுங்கள்!