வயலுக்குள் மின் கம்பி வீழ்ந்து மின்சாரம் பாய்ந்ததால் ஒருவர் பலி..!

முத்துப்பேட்டை அடுத்த கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி முருகையன் (45). இவர் கடந்த சனிக்கிழமை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை தேடி அலைந்தனர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதனை அடுத்து நேற்று முன்தினம் அப்பகுதி அருகே உள்ள வயலுக்கு சென்ற ஒருவர் முருகையன் வாய்க்காலில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தார். அப்போது அருகே இருந்த மின் கம்பி மீது கஜா புயலால் சாய்ந்த ஒரு மரம் விழுந்ததில் இந்த மின்கம்பி வாய்க்காலில் விழுந்து மூழ்கியிருந்ததும் இதை கவனிக்காமல் முருகையன் வாய்க்காலில் இறங்கியதால் அவர் மின்சாரம் தாக்கி இறந்ததும் தெரியவந்தது. அந்த வாய்க்காலில் மின்சாரம் பாய்ந்திருந்ததால் பாம்புகள் மற்றும் மீன்களும் இறந்து மிதந்தன.

போலீஸார் முருகையன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஜா புயலுக்கு பின் மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் அதிகம் நடந்த வண்ணம் உள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.