ஒரு மாதம் ஆகியும் மின்சிரமைப்பு பணி துவங்காததால், தர்ணா போராட்டத்தில் இறங்கிய தில்லைவிளாகம் மக்கள்.!

முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் தெற்குகாடு கிராமத்தில் மின் சீரமைப்பு பணியை துவங்காததால் கிராம மக்கள் மின்வாரிய அதிகாரிகள் தங்கியிருந்த மண்டபம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் தெற்குகாடு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிறுப்புகள் உள்ளது. இப்பகுதியில் செல்லும் மின் கம்பிகள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் பழமையானது என்பதால் இப்பகுதியில் பல ஆண்டுகளாக குறைந்த அழுத்தத்தில் மின்சார விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனால் அவைகளை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் மின் வாரியத்தினர் மின்கம்பம், மின்மாற்றி புதிதாக அமைக்க துவங்கினர்.

இந்நிலையில் கடந்த 15ம் தேதி வீசிய கஜா புயலால் அணைந்து மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. இதனால் மின் இணைப்புகளும் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. புயல் கடந்து ஒரு மாதம் ஆகியும் இப்பகுதியில் இன்னும் மின் வினியோகம் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் பல்வேறு துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தில்லைவிளாகம் ஊராட்சி பகுதிக்கு வந்த வெளி மாவட்ட மின் பணியாளர்கள் தில்லைவிளாகத்தில் முக்கிய பிரமுகர்கள் தங்கியுள்ள பகுதி, ஆளுங்கட்சி பிரமுகர்கள் வசிக்கும் பகுதிக்கு மட்டும் சீரமைப்பு பணிகளை துவங்கி முடித்தனர். இதில் தெற்குகாடு பகுதியை மட்டும் புறக்கணித்து விட்டு நேற்றுடன் தாங்கள் பகுதிக்கு பணிமுடிந்துவிட்டது தெற்குகாடு பகுதிக்கு இப்போதைக்கு பணி கிடையாது. உள்ளூர் பணியாளர்கள் வந்த சரிசெய்வார்கள் என்று கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் முத்துப்பேட்டை மின்வாரிய அதிகாரிகளை தொடர்புக் கொண்டு புகார் தெரிவித்தனர். ஆனால், சீரமைப்பு பணிக்கு யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு முத்துப்பேட்டையில் வெளி மாவட்ட மின் பணியாளர்கள் தங்கியிருக்கும் திருமண மண்டப வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்குவந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிரபு மற்றும் அதிகாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி தெற்குகாடு பகுதிக்கு சீரமைப்பு பணிக்கு பணியாளர்கள் அனுப்பப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.