பொதுமக்களை மிரட்டும் மின் கம்பங்கள் – பொதுமக்கள் அச்சம்…

முத்துப்பேட்டை பகுதிகளில் மக்களை மிரட்டி கொண்டிருக்கும் புயலில் சிக்கிய மின் கம்பங்கள்.

முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின் கம்பங்கள் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. புயலினால் சேதம் அடைந்த மின் கம்பங்கள் முத்துப்பேட்டையில் பெரும்பாலான பகுதிகளில் புதிதாக மாற்றப்பட்டு மின் வினியோகம் வழங்கப்பட்டது. ஆனாலும் குறிப்பிட்ட சில தெருக்களில் சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றப்படாமல் எப்போது விழும் என்ற நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

நம்முடைய பல பதிவுகளில் இந்த மின் வாரியத்தின் அலட்சியபோக்கு குறித்து பதிவிட்டு இருந்தோம். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் இன்னும் அரங்கேரவில்லை. இது ஒருபுறம் இருக்க புதிதாக மாற்றப்பட்ட மின் கம்பங்கள் நிலையும் பரிதாபமாக உள்ளது. சாதாரண மழைக்கே தாக்கு பிடிக்குமா? என்ற எண்ணம் மக்கள் மனதில் அனுதினமும் ஓடிக்கொண்டிருக்கிறது.

முத்துப்பேட்டை புதுமனை தெரு 5 வது வார்டு திருமேனி காலணி அருகில் பழைய சேதம் அடைந்த மின் கம்பம்கள் மாற்றப்படாமல் அதே நிலையில் மின் சேவை இணைக்கப்பட்டுள்ளது. மேற்பகுதி சேதம் அடைந்துள்ளதால், எப்போது விழும் என்று சொல்ல முடியாத அளவிற்கு மிக மோசமாக இருந்து வருகிறது. அப்பகுதி மக்கள் நம்மிடம் கூறுகையில் : எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் இருக்கிறது இந்த மின்கம்பம். கஜா புயலின் இழப்பை போல் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் மறுபடியும் இதனால் ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் நாங்கள் இருந்து வருகிறோம். அதை சரி செய்து தர வேண்டி பலமுறை கோரிக்கைகள் வைத்தும் நிறைவேற்ற முன்வரவில்லை; என்று குற்றம் சாட்டினர்.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மின்வாரிய துறை செயல்பட வேண்டும். விரைவில் முத்துப்பேட்டை பகுதிகளில் இதே போன்ற நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த முத்துப்பேட்டை மக்களின் கோரிக்கையாக உள்ளது.