விடுமுறை தினத்தில் இயங்கிய தனியார் பள்ளி – பள்ளி கல்வித்துறை செக்…

முத்துப்பேட்டையில் விடுமுறை தினத்தில் இயங்கிய தனியார் பள்ளியில் திடீர் ஆய்வு.

முத்துப்பேட்டையில் கஜா புயலின் காரணமாக பள்ளிகள் 20 நாட்களுக்கு மேலாக விடுமுறை விடப்பட்டன. இதனை தொடர்ந்து தனியார் பள்ளிகள் 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு விடுமுறை தினங்களிலும் அரசு பள்ளிக்கல்வி துறை அனுமதித்துள்ள நேரத்திற்கு மேலாக வகுப்புகள் நடத்தி வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடத்தில் புகார் அளித்தனர்.

பெற்றோர்களின் கடும் எதிர்ப்பை மீறி முத்துப்பேட்டை மன்னார்குடி சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளி அனைத்து வகுப்புகளும் வழக்கம்போல் இயங்கும் என முன்னறிவிப்பு செய்திருந்தது. பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியும் பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். இதில் அனைத்து வகுப்புகளும் அரசு விடுமுறை தினத்திலும் இயங்கியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் அப்பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பள்ளி மாணவர்களை உடனே வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து மாணவர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.