பட்டுக்கோட்டையில் நடந்த சாலை மறியலில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு.!

கஜா புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் தீடிர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்களின் தீடிர் சாலை மறியல்:

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 44 நாட்களாகியும் இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படாததை கண்டித்து பட்டுக்கோட்டை நகராட்சி 29வது வார்டு பாரதி நகர், காட்டுநாயக்கன் தெரு, சீனிவாசன் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தீடிர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு:

அப்போது அங்கு வந்த போலீசார் மறியல் நடத்திய பொதுமக்களை பார்த்து இங்கு யாரும் சாலை மறியல் செய்யக்கூடாது. தாலுகா அலுவலகத்திற்கு செல்லுங்கள் இல்லையென்றால் உங்கள் அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டியிருக்கிறார்கள். அதன்பின், போலீசார் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களில் ஒருவரின் சட்டையை பிடித்து இழுத்தார். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அங்கிருந்த பொதுமக்களை வலுக்கட்டாயமாக கைது செய்ய முயற்சித்தனர். அப்போது பொதுமக்கள் ஒட்டு மொத்தமாக கூச்சலிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தாசில்தார் நேரில் ஆய்வு:

இந்த தகவல் அறிந்து அங்கு வந்த பட்டுக்கோட்டை தாசில்தார் சாந்தகுமார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் எங்கள் தெருவிற்கு வந்து ஆய்வு நடத்துங்கள் என்று கூறி தாசில்தாரை முற்றுகையிட்டனர். உடனே அவர் சம்பந்தப்பட்ட பாரதி நகருக்கு சென்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி அளித்தார். தாசில்தார் உறுதி அளித்ததற்கு பின் சாலை மறியல் கைவிடப்பட்டது.