முத்துப்பேட்டை அரசு மருத்துவரை தாக்கிய இருவர் கைது. பாஜக பிரமுகர் உட்பட மூவருக்கு வலைவீச்சு.!

கடந்த 29ம் தேதி முத்துப்பேட்டை அடுத்த பேட்டையில் சுகாதாரத்துறை சார்பில் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு மலேரியா நோய்த்தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதனால் அனைவருக்கும் லேசான தலைச்சுற்று ஏற்பட்டது.

அப்போது, தட்டாரத்தெரு பகுதியை சேர்ந்த கீர்த்தனா(20), அகிலா(32), சஞ்சய்(12), விகாஷ்(6). மஞ்சுளா(45), அமுதா(32), நிதிஷ்(6), கணேஷ்(8) ஆகியோருக்கு வயிற்றுவலி மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனே அனைவரும் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இதில் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த அரசு மருத்துவர் அரவிந்தனிடம் சிலர் சிகிச்சை குறித்து கேட்டபோது, நாற்காலியில் அமர்ந்தபடி டாக்டர் பதில் சொன்னதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சிலர் “மரியாதையை கொடுக்க மாட்டியா” என்று கூறி தகராறு செய்து டாக்டரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டதையடுத்து முத்துப்பேட்டை போலீசார் அங்கு சென்று டாக்டரை மீட்டனர். பின்னர் தாக்கப்பட்ட அரசு மருத்துவர் அரவிந்தன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் அந்த புகார் குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதால் அதிருப்தியடைந்த அரசு மருத்துவர்கள் நேற்று முன்தினம் டாக்டர் அரவிந்தை தாக்கியவர்கள் மீதி நடவடிக்கை எடுக்கக்கோரி திருவாரூர் எஸ்பி அலுவலகம் முன் திரண்டனர்.

இந்நிலையில் நேற்று முத்துப்பேட்டை போலீசார் அரசு மருத்துவர் அரவிந்தை பாஜக மாவட்ட தலைவர் பேட்டை சிவா தலைமையில் 5 பேர் கொண்ட கும்பல் தாக்கி அருவருப்பான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்து, நேற்று பேட்டை கிராமத்தை சேர்ந்த முருகானந்தம்(30), பாலா என்கிற பிரபாகர்(21) ஆகிய இருவரை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைந்தனர். மேலும், பாஜக மாவட்ட தலைவர் பேட்டை சிவா உட்பட மூவரை தேடி வருகின்றனர்.