எச்சில் துப்பிய விவகாரம் – பஸ் கண்டக்டருக்கு கத்தி குத்து…

முத்துப்பேட்டை அருகே உள்ள ஆரியலூர் கிராமத்தை சேர்ந்த கரிகாலன் என்பவரின் மகன் வினோத்குமார் (34). இவர் நேற்று தனது மோட்டார் பைக்கில் பாண்டி சத்திரம் அருகே சென்று கொண்டிருந்தார். அச்சமயம் நெடும்பலம் பகுதியை சேர்ந்த திருத்துறைப்பூண்டி டெப்போ அரசு பஸ் கண்டக்டர் சாமிநாதன்(43) என்பவரும் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

இருவரும் கடக்கும் சமயம் சாமிநாதன் எச்சில் துப்பியதாக கூறப்படுகிறது. துப்பிய எச்சில் வினோத்குமார் மீது பட்டதால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வினோத்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாமிநாதன் வயிற்றில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை உடனே திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இச்சம்பவம் குறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்திய தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளர் வினோத்குமாரை வலைவீசி தேடிவருகின்றனர்.