முழுமையாக வழங்கப்படாத அரசு நிவாரண பெட்டகம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு.!

முத்துப்பேட்டை சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் இன்று 27 பொருட்கள் அடங்கிய நிவாரணப் பெட்டகம் வழங்கப்பட்டது.

கஜா புயலினால் அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதி முத்துப்பேட்டை. புயல் பாதித்து 2 மாதம் நெருங்கிய நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. இதனை அடுத்து தமிழக அரசால் வழங்கப்படும் புயல் நிவாரண பொருட்கள் அடங்கிய பெட்டகம் இன்னும் முத்துப்பேட்டை மக்களுக்கு சென்று அடையவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டாக இருந்து வரும் சூழலில் இன்று காலை சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் குறிப்பிட்ட சில வார்டு பொதுமக்களுக்கு மட்டும் டோக்கன் முன்னரே வழங்கப்பட்டு 27 பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது.

ஆனால் பெரும்பாலான மக்களுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நிவாரண பொருட்களில் தொடர்ந்து அரசு பாரபட்சம் காட்டி வருவதாக அவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

வழங்கப்பட்ட நிவாரணப் பெட்டகத்தில் உள்ள பொருட்களிலும் குளறுபடி காணப்படுகிறது. ஒரு பெட்டகத்தில் உள்ள சில பொருட்கள் மற்றொரு பெட்டகத்தில் இல்லை. மேலும், பொருட்கள் எண்ணிக்கை குறைவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

முத்துப்பேட்டை மக்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி நிவாரணம் வழங்கவேண்டும் என்று பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.