பொதுமக்களே சரிசெய்த கல்கேனி குளம் சாலை..

முத்துப்பேட்டை 16 வது வார்டு கல்கேனி தெரு பகுதியில் உள்ள கல்கேனி குளம் சாலை ஜேசிபி கொண்டு பொதுமக்களால் சமன் செய்யப்பட்டது.

கல்கேனி குளம் பல வருடங்களாக கேட்பாரற்று சுத்தம் செய்யப்படாமல் குப்பை மற்றும் அசுத்தங்களை சுமந்து கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அதன் மேற்பகுதியில் உள்ள நூர் பள்ளிவாசலுக்கு செல்லும் சாலை வாகனங்கள் செல்வதற்கு முக்கிய சாலையாக இருந்து வருகிறது. ஏனெனில் இரயில்வே தண்டவாளங்கள் அமைத்த பிறகு ஒரு பாதை முற்றிலும் அடைப்பட்டு வாகனங்கள் செல்லமுடியாத சூழல் உருவாகியதால் இந்த கல்கேனி குளம் சாலை முக்கிய சாலையாக மாறியது. ஆனால் அந்த சாலையை குப்பைகள் மற்றும் காடுகள் ஆக்கிரமித்து ஒத்தையடி பாதை போல் பொதுமக்கள் நடப்பதற்கும் மற்றும் வாகனங்கள் மூலம் செல்வதற்கும் மிகுந்த இடையூறாக இருந்து வந்தது.

இந்நிலையில் அந்த சாலை பொதுமக்கள் முயற்சியால் ஜேசிபி உதவியுடன் நேற்று சமன் செய்யப்பட்டது. மேலும் சாலையில் நிரம்பி இருந்த காடுகள் அழிக்கப்பட்டு பெரிய வாகனங்கள் செல்லும் அளவிற்கு அந்த சாலை உருமாறியுள்ளது. இதற்கான ஜேசிபி வாடகை அப்பகுதி பொதுமக்களே வசூல் செய்து செலுத்தினர்.

பேரூராட்சி நிர்வாகம் செய்ய தவறிய இந்த பணியை அப்பகுதி மக்களே கையில் எடுத்து செய்து முடித்த இந்த பணியை அனைத்து பகுதி மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.