புதையுண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண் சடலம்…

முத்துப்பேட்டை அருகே புதையுண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண் சடலம். கொலையா? காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.

முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை மீனவ கிராமத்தில் இருந்து அலையாத்திக்காட்டுக்கு செல்லும் பாதையில் கோரையாற்றுக்கு நடுவில் நடுத்திட்டு என்ற மணல் திட்டு உள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்த மணல் திட்டில் தங்கி ஓய்வெடுத்து விட்டு மீன்பிடிக்க செல்வது வழக்கம். இந்நிலையில் சில மீனவர்கள் அப்பகுதிக்கு சென்றபோது அருகே ஏதோ துர்நாற்றம் வருவதை உணர்ந்தனர். உடனே அங்கு சென்று பார்த்தபோது புதையுண்ட நிலையில் ஒரு ஆண் சடலம் இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்கள் முத்துப்பேட்டை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிக்கோதிவ்யன் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், இந்த சம்பவம் கொலையாக இருக்கலாம்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சடலம் அந்த இடத்தில் கூடாரம் அமைத்து தங்கி இருந்த சிவக்குமார் என்பவராக கூட இருக்கலாம். மேலும், அவரை 15 நாட்களுக்கு மேலாக அந்த பகுதியில் காணவில்லை, என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

அந்த சடலத்தை பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.