தனியார் செல்போன் டவருக்கு எதிர்ப்பு…

முத்துப்பேட்டை ஆலங்காடு பகுதியில் செல்போன் டவர் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு.

ஆலங்காடு கிராமத்தில் உள்ள செட்டித்தெருவில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரது இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணிகள் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் அந்த நிறுவனத்திடம் இப்பகுதியில் டவர் அமைக்க கூடாது, என்று கூறினர். இருப்பினும் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி அப்பகுதியில் டவர் அமைக்கப்பட்டது.

மேலும், மின் விநியோக பணிகள் முழுமையடைய உள்ள நிலையில், நேற்று தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில இளைஞர் அணி செயலாளர் தீரன், மாவட்ட நிர்வாகி ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் மக்கள் முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய ஆணையரை சந்தித்து மனு ஒன்று கொடுத்தனர்.

இந்த பகுதியில் செல்போன் டவர் அமைப்பது மூலம் ஏற்படும் கதிர் வீச்சினால் புற்று நோய், உட்பட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் இப்பகுதி மக்களாகிய நாங்கள் பெரும் அச்சத்தில் வசித்து வருகிறோம். எனவே, இங்கு செல்போன் டவர் அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட ஒன்றிய ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததுடன், ஆலங்காடு ஊராட்சி நிர்வாகத்திற்கு ஊராட்சியில் அனுமதியில்லாமல் டவர் அமைப்பது சட்டப்படி குற்றமாகும். மேலும், டவர் அமைக்கும் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும், கடிதம் மூலம் உத்தரவிட்டார்.