அங்கன்வாடியில் இயங்கும் அரசுப்பள்ளி – பெற்றோர்கள் வேதனை…

முத்துப்பேட்டை அருகே உள்ள உப்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி அங்கன்வாடி மையத்தில் இயங்கும் அவலம்.

உப்பூர் பகுதியில் உள்ள காசடிக்கொல்லை என்ற கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வகுப்பறை காஜா புயலில் கோரத்தாண்டவத்திற்கு இரையானது. இந்த பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனை அடுத்து அந்த பள்ளி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடிக்கு மாற்றப்பட்டது. அங்கும் இடவசதி இல்லாததால் அங்கன்வாடி அருகில் தகர செட்டு போட்டு வகுப்புகள் நடைபெற்று வரும் அவலம் தொடர்கிறது.

புதிய கட்டிடம் வேண்டி பல மனுக்கள் பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டும் எந்த பயனும் இல்லை. பாதுகாப்பு இல்லாத பள்ளியில் தங்கள் பிள்ளைகளை எப்படி படிக்க அனுப்புவது என்று மாணவர்களின் பெற்றோர்கள் பொங்கி எழுந்துள்ளனர். மேலும், வரும் கல்வி ஆண்டு முதல் தங்களின் பிள்ளைகளை பாதுகாப்பான பள்ளியில் சேர்க்க போவதாக கூறியுள்ளனர்.

பெற்றோர் ஆசிரிய கழக நிர்வாகி ராஜேந்திரன் கூறுகையில், புதிய கட்டிடம் வேண்டி பலமுறை மனு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை. மேலும், இந்த பள்ளி கட்டிடம் தேர்தல் நேரங்களில் வாக்குச்சாவடிகளாகவும் இயங்கி வருகிறது. புதிய கட்டிடம் அமைக்க தவறினால் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை கணிசமாக குறையும் என்று அவர் கூறினார்.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவாக பள்ளி கட்டிடம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.