முத்துப்பேட்டை கோவிலூர் பகுதியை சேர்ந்த விசிக பிரமுகர் அரிவாளால் வெட்டி கொலை.!

முத்துப்பேட்டை கோவிலூர் பகுதியை சேர்ந்த விசிக பிரமுகர் அரிவாளால் வெட்டி கொலை.

முத்துப்பேட்டை கோவிலூர் பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் செல்வரசூன் (28). இவர் காதல் திருமணம் செய்துள்ளார். இவருடன் ஒன்றாக வேலை செய்து வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவருடன் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனி தனியே வேலைக்கு சென்று வந்துள்ளனர்.

நேற்று செல்வரசூன், அப்பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவருடன் சேர்ந்து சமையல் செய்வதற்காக வயல் நத்தைகளை பிடித்து அவற்றை அதே பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ராஜசேகர் அரிவாளால் செல்வரசூனின் கழுத்தில் வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனால் பதறி போன மகேந்திரன் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள் செல்வரசூனை மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து முத்துப்பேட்டை போலீசார் செல்வரசூனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜசேகரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.