முத்துப்பேட்டை விசிக பிரமுகர் கொலை – திருத்துறைப்பூண்டியில் சாலை மறியல்..

முத்துப்பேட்டை விசிக பிரமுகர் கொலை தொடர்புடைய குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடிக்க வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

முத்துப்பேட்டை கோவிலூர் பகுதியில் விசிக ஒன்றிய செயலாளர் செல்வரசூன் நேற்று முன்தினம் அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும், என்பதை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே விசிக கட்சி சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் திருத்துறைப்பூண்டி சட்டசபை தொகுதி செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மேலும், நாகை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இடி முரசு, மாநில துணை செயலாளர் பூமிநாதன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.