விவசாயி மகளின் திருமணத்திற்காக அடகு வைத்த 1¼ லட்சம் தந்திரமான முறையில் திருட்டு..

முத்துப்பேட்டையில் விவசாயியிடம் மகளின் திருமணத்திற்காக அடகு வைத்த ரூ.1¼ லட்சம் தந்திரமான முறையில் திருட்டு.

முத்துப்பேட்டை அருகே கீழநம்மங்குறிச்சி பெத்தவேளாண்கோட்டகம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகரன் (வயது 45). இவர் நேற்று முன்தினம் மகளின் திருமணத்திற்காக வேண்டி முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 8 பவுன் நகையை ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 500-க்கு அடகு வைத்துள்ளார்.

பின்னர் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு வங்கியை விட்டு வெளியே வந்து தனது இருசக்கர மோட்டார் வாகனத்தில் முன் கவரில் வைத்து செல்வதற்கு ஆயத்தமாகி நின்று கொண்டிருந்தார்.அச்சமயம் அங்கு நின்று கொண்டிருந்த 2 மர்ம நபர்கள், சந்திரசேகரனிடம் 10 ரூபாய் நோட்டுகள் கீழே கிடக்கிறது என கூறியுள்ளனர். உடனே அவர் அந்த 10 ரூபாய் நோட்டுகளை எடுக்க கீழே சென்றுள்ளார். அதற்குள் அந்த 2 மர்ம நபர்கள் சந்திரசேகரனின் மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் இருந்த பணத்தையும், வங்கி கணக்கு புத்தகத்தையும் திருடி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து சந்திரசேகரன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

முத்துப்பேட்டை நகர பகுதிக்குள் விவசாயியிடம் நூதன முறையில் பணத்தை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.