அடுத்து யார்? விபத்தை ஏற்படுத்த ரெடியாக இருக்கும் இரயில்வே கேட்.!

முத்துப்பேட்டை பிரில்லியன்ட் பள்ளி அருகே உள்ள இரயில்வே கேட் பாதை குண்டும் குழியுமாக விபத்தை ஏற்படுத்த தயார் நிலையில் இருக்கிறது.

முத்துப்பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் பிரில்லியண்ட் பள்ளிக்கூடம் அருகே அமைந்துள்ள இரயில்வே கேட் தண்டவாளங்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் சரிசெய்யப்பட்டன. அதன் பிறகு அந்த தண்டவாளங்கள் மேற்பகுதியில் ஜல்லி கற்கள் மட்டும் போட்டு பரப்பப்பட்டு குண்டும் குழியுமாக தண்டவாள இரும்பு கம்பி மேலே தெரியும் அளவிற்கு மோசமாக உள்ளது. அந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்மணி தண்டவாளம் சறுக்கி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பேருந்து தலையில் ஏறி உயிரிழந்தார்.

தற்போது அந்த சாலை அதே நிலைமையில் தான் காணப்படுகிறது. இரயில்வே பாதை உயரம் ஏற்றப்பட்டு சாலை ஓரங்களில் கம்பிகள் தடுப்பு அமைக்கப்பட்டதால், அந்த சாலை மிக குறுகலாக மாறியுள்ளது. சரியாக ஒரு பேருந்து மட்டும் கடந்து செல்லும் அளவிற்கு குறுகலாக உள்ளது. மேலும், அந்த பகுதியில் பள்ளிக்கூடம் உள்ளதால் மாணவர்கள் பள்ளி செல்லும் போது அந்த சாலையை தாண்டித்தான் செல்லவேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது. மாணவர்கள் பலமுறை அந்த தண்டவாளத்தில் விழுந்து எழும் அவலம் தொடர்கிறது.

ஆகவே, இரயில்வே நிர்வாகம் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அந்த சாலையை வாகனங்கள் செல்ல ஏற்றார் போல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.