ECR சாலையில் நெல் காயவைத்து கொண்டிருந்த விவசாயி மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்..

முத்துப்பேட்டை ECR சாலையில் நெல் காயவைத்து கொண்டிருந்த விவசாயி மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்துப்பேட்டை நம்மகுறிச்சி பெத்த வேளாண்மை கோட்டத்தை சேர்ந்தவர் விவசாயி முருகையன் (40). இவர் முத்துப்பேட்டை கோவிலூர் அருகே ECR சாலையில் நெல் காயவைத்து கொண்டிருந்தார். அப்போது அந்த சாலை வழியே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக நெல் காயவைத்து கொண்டிருந்த முருகையன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அமர்நாத் (26) என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும், இந்த விபத்தில் காயம் அடைந்த அமர்நாத் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்து முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் நெல் காயவைத்து கொண்டிருந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.