காலாவதியான நிவாரண பொருட்கள் – பொதுமக்கள் காட்டம்…

முத்துப்பேட்டை அருகே பின்னத்தூரில் காஜா புயல் நிவாரணமாக வழங்கப்பட்ட பொருட்கள் காலாவதியானது, என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பின்னத்தூர் பகுதியில் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் முறையாக கிடைக்காததை அடுத்து அப்பகுதி மக்கள் நிவாரண பொருட்கள் வழங்க கோரி கடந்த மாதம் 25 ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து பின்னதூர் பகுதியில் செவ்வாய் கிழமை (5-3-2019) அன்று நிவாரண பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது.

புயலில் பாதித்த மக்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரண பொருட்கள் மொத்தம் 27, ஆனால் அப்பகுதியில் பல குடும்பத்திற்கு முறையான எண்ணிக்கையில் பொருட்கள் இல்லை என்பது குற்றச்சாட்டாக அப்பகுதி மக்கள் முன் வைக்கின்றனர். வழங்கப்பட்ட நிவாரண பையில் வெறும் 19 பொருட்கள் மட்டுமே இருந்தாகவும், மேலும் அத்தியாவசிய பொருட்களான தார்பாய், சேலை, அரிசி மற்றும் வேட்டி போன்ற பொருட்கள் அதில் இடம்பெறவில்லை, எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

வழங்கப்பட்ட நிவாரண பொருட்களை பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. நிவாரணப் பையில் பல பொருட்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு தேதி காலாவதியான பொருட்கள் என்று பின்னத்தூர் பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.