கஜா புயலில் விழுந்த பெயர் பலகை – வாகன ஓட்டிகள் அவதி…

முத்துப்பேட்டை அருகே துவரங்குறிச்சியில் கஜா புயலில் விழுந்த பெயர் பலகை சரி செய்யப்படாமல் அப்படியே கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.

முத்துப்பேட்டை – பட்டுக்கோட்டை சாலை வழியே துவரங்குறிச்சி பகுதியில் 4 சாலைகள் சந்திக்கும் இடம் அருகே கஜா புயலில் விழுந்த பெயர் பலகை அப்படியே கிடப்பதால் வெளியூர் மக்கள் முகவரி தெரியாது சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் ஊர்களின் விவரம் குறித்த பெயர் பலகை இல்லாத காரணத்தால் கடுமையான அவதியை சந்தித்து வருகின்றனர். கஜா புயல் தாக்கி 4 மாதங்கள் ஓடிய நிலையில் இன்னும் அந்த பலகை சரி செய்யப்படாமல் இருப்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 
முத்துப்பேட்டை, நாகை, வேளாங்கன்னி மற்றும் இதர சுற்றுலா தலங்கள் செல்வதற்கு இந்த சாலை மிக முக்கியமானதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் செல்வதற்கும் இந்த சாலையை வாகன ஓட்டிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாக இருந்து வருகிறது.