பேரூராட்சி அலுவலகம் முன் அமைந்திருந்த அனைத்து கட்சி கொடிமரங்களும் அகற்றம்…

முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன் அமைந்திருந்த அனைத்து கட்சி கொடிமரங்களும் அகற்றப்பட்டன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மாதம் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பெயரில் மாநிலம் முழுவதும் நகரப்பகுதிகளில் செய்யப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. மேலும், அரசியல் கட்சிகளின் கொடி மரங்களில் இருந்த கட்சிக் கொடிகள் அகற்றப்பட்டு கல்வெட்டுகள் துணிகள் கொண்டு மறைக்கப்பட்டன.

பல கோடி ரூபாய் செலவில் போடப்படும் சாலைகளில் பள்ளம் தோண்டி கொடிமரம் அமைக்கின்றனர். இதனை தடை செய்யக்கோரி பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனை அடுத்து சென்னை உயர் நீதிமன்றம் மாநிலம் முழுவதும் பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் மூலம் வைக்கப்பட்டுள்ள கொடி மரங்களை அகற்ற வேண்டும், என மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டது. இதன் எதிரொலியாக முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன் அமைந்திருந்த அரசியல் கட்சிகளின் கொடிமரங்கள் மற்றும் மேடைகள் நேற்று ஜேசிபி உதவியுடன் அகற்றப்பட்டது.

பல ஆண்டுகளாக அமைந்திருந்த கொடிமரங்கள் அகற்றப்பட்டது, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.