தேர்தலில் வாக்களிக்க கடிதம் வழங்கி அழைப்பு..!

முத்துப்பேட்டையில் அஞ்சல் துறையினர் வீடு வீடாகவும் பொதுமக்களை நேரடியாகவும் சந்தித்து வரும் மக்களவை தேர்தலில் வாக்களிக்க கடிதம் வழங்கி அழைப்பு விடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழகத்தில் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 100% வாக்குகள் பதியப்பட வேண்டும் என்பதற்காக மாநில மற்றும் மத்திய அரசுகள் பல முயற்சிகள் செய்து வருகிறது. இதற்காக பல கோடியில் செலவுகளும் செய்யப்படுகிறது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் சார்பில் அஞ்சல் துறையினருடன் இணைந்து தேர்தல் திருவிழா- 2019 கண்ணியத்துடன் வாக்களிக்க அழைப்பு என்ற பெயரில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள தங்கள் குடும்பத்திலுள்ள உள்ள அனைவரும் தவறாமல் தாங்கள் பெயர் பதியப்பட்டுள்ள வாக்கு சாவடிக்கு சென்று தங்கள் வாக்கினை பதிவு செய்யும்படி அன்புடன் அழைக்கிறோம் என்று குறிப்பிடப்பட்ட ஒரு கடிதம் போன்று அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதனை முத்துப்பேட்டை அஞ்சல் துறையினர் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள வீடுகளில் வியாபார தளங்கள் பொது மக்களிடம் நேரடியாக சென்று வழங்கி வருகின்றனர். இதனை மக்களும் ஆர்வத்துடன் வாங்கி படித்து வருவதுடன் இந்த கடிதம் வரும் தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க செல்ல ஒவ்வொரு வாக்காளர்களையும் தூண்டுகிறது என்றனர்.

இந்நிலையில் இந்த வாக்காளர்களை அழைப்பு விடுத்து வழங்கப்படும் வரும் கடிதம் முத்துப்பேட்டை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.