திருவாரூர்-காரைக்குடி இடையேயான இரயில் சேவை – முத்துப்பேட்டையை வந்தடையும் நேரம்?

திருவாரூர்-காரைக்குடி இடையேயான இரயில் சேவை வருகிற 1-ந் தேதி முதற்கட்டமாக தொடங்கும் என அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருவாரூர்-காரைக்குடி இடையே அனைத்து பணிகளும் நிறைவுபெற்று கடந்த மார்ச் மாதம் சோதனை ஓட்டமும் முடிவடைந்தது. இதனை அடுத்து, பணியாளர்கள் நியமனம் போன்ற பணிகளில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாக இரயில் சேவை தொடங்குவதில் சிக்கல் நீடித்தது.

இந்நிலையில், இரயில் சேவையை தொடங்க இரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் ஜூன் மாதம் திருவாரூர்-காரைக்குடி இடையே இரயில் சேவை தொடங்க இருக்கிறது.

திருவாரூரில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு பகல் 2.15 மணிக்கு சென்றடையும். பின்னர் மீண்டும் காரைக்குடியில் இருந்து பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு திருவாரூருக்கு இரவு 8.30 மணிக்கு வந்தடையும். இந்த ரெயில் மாங்குடி, மாவூர் ரோடு, திருநெல்லிக்காவல், அம்மனூர், அலட்டாம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துபேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஒட்டன்காடு, பேராவூரணி, அய்யன்குடி, அறந்தாங்கி, வளரமாணிக்கம், கண்டனூர்புதுவயல் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என திருச்சி கோட்ட இரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

முத்துப்பேட்டை இரயில் நிலையத்திற்கு ( திருவாரூரில் இருந்து) காலை 10.12 மணிக்கும் மற்றும் எதிர் மார்க்கத்தில் ( காரைக்குடியில் இருந்து) மாலை 6.25 மணிக்கும் இரயில் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்:

திருவாரூர்-காரைக்குடி இடையே அகல பாதையில் 102 ரெயில்வே கேட்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கேட்டுகளின் அருகே வரும்போது ரெயிலை நிறுத்தி என்ஜினில் இருந்து ஒரு ஊழியர் இறங்கி கேட்டை மூடியபின் அந்த கேட்டை ரெயில் கடந்து செல்லும். அதன்பின் கார்டு பெட்டியில் இருந்து ஒரு ஊழியர் இறங்கி சாலை போக்குவரத்திற்காக ரெயில்வே கேட்டை திறந்துவிட்டு ரெயிலில் ஏறி பயணிப்பார்.

இதுபோன்று ஒவ்வொரு கேட்டிலும் ரெயில் நின்று செல்லும் என ரெயில்வே வட்டாரத்தில் தெரிவித்தனர். இதனால் பயண நேரம் கூடுதலாகும். எனவே ரெயில்வே கேட்டுகளில் ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகத்தினருக்கு பயணிகள் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது