முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலப் பாதைகளை கலெக்டர் ஆய்வு செய்தார்!

முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் பாதை மற்றும் பாதுகாப்பு பணிகளை திருவாரூர் கலெக்டர் ஆனந்த், எஸ்.பி.துரை ஆகியோர் ஆய்வு!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வரும் 6ந்தேதி இநது முன்னணி சார்பில் 27ம்ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஊர்வலத்தில் ஜாம்புவானோடை, வடக்காடு, உப்பூர், தில்லைவிளாகம், அரமங்காடு, ஆலங்காடு உட்பட 19 பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது.

முன்னதாக மதியம் 2மணிக்கு துவங்கும் ஊர்வலம் ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரவன்சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கோரை ஆற்றுபாலம் பகுதி வழியாக முத்துப்பேட்டை ஆசாத்நகர் சென்று அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து பதற்றமான பகுதியாக கருதப்படும் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள நியூபஜார், கொய்யா முக்கம், பங்களாவாசல் வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் மாலை 6மணிக்கு கரைக்கப்படுகிறது.

முத்துப்பேட்டை பதற்றம் நிறைந்த பகுதி என்பதால் ஊர்வலத்தில் அசாம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுக்காப்பு பணியில் ஈடுபடபோவதாக கூறப்படுகிறது. மேலும் முத்துப்பேட்டை முழுவதும் போலீஸ் கட்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பட்டுக்கோட்டை சாலை, மன்னார்குடி சாலை, திருத்துறைப்பூண்டி சாலை, வேதாரண்யம் சாலை ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இருந்த சோதனை சாவடிகளில் அல்லாமல் தற்காலிக சோதனை சாவடிகளும் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், முத்துப்பேட்டையில் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் ஊர்வல பாதையை திருவாரூர் கலெக்டர் ஆனந்த், திருவாரூர் எஸ்.பி.துரை ஆகியோர் பார்வையிட்டனர் மேலும் ஊர்வலம் துவங்கும் சிவன் கோவில், ஊர்வலம் செல்லும் ஜாம்புவானோடை தர்கா, சிவராமன் நினைவு ஆர்ச், ஆசாத்நகர் கோரையாறு பாலம், திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேரூந்து நிலையம், கொய்யா முக்கம், பங்களா வாசல், ரஹ்மத் பள்ளி, செம்படவன்காடு மற்றும் சிலைகள் கரைக்கும் பாமணி ஆற்றுக்கரை ஆகியவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு அதிகாரிகளிடம் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

அப்பொழுது மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், மன்னார்குடி கோட்டாச்சியர் புன்னியக்கொடி, முத்துப்பேட்டை டிஎஸ்பி இனிகோ திவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் அதிரடிப்படை போலீசார் உடன் சென்றனர்.

தகவல் : ஹாஜா