முத்துப்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் கடும் அவதி!!

முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் ஊராட்சி பகுதியிலுள்ள எக்கல் கிராமம் அடிப்படை வசதிகளில் மிகவும் பின்தங்கிய பகுதியாக, அன்றாடம் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வரும் கிராமமாக உள்ளது.

குறிப்பாக, சாலை வசதி, சுகாதாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையில், எக்கல் கிராமத்தில் மிக முக்கிய பகுதியான தேவர்புரம் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள கப்பி சாலை இப்பகுதியை இணைக்கும் முக்கிய சாலையாக இருந்து வருகிறது.

இந்த சாலையை பயன்படுத்தி தான் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சாலை போட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த சாலையில் போடப்பட்ட கப்பி கற்கள் பெயர்ந்து அதன் ஜல்லிகள் காணாமல் போய் சாலை படுமோசமான நிலையில் தற்போது மனிதர்கள் நடமாடவே லாயக்கில்லாத சாலையாக உருவெடுத்துள்ளது.

தேவர்புரம் பகுதி மக்களுக்கு முக்கிய சாலையாக விளங்கும் இந்தச் சாலையை, அப்பகுதி மக்களின் நலன் கருதி சீரமைத்து தர வேண்டும், என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Source: Dinakaran