முத்துப்பேட்டை அருகே கஜா புயலில் உருக்குலைந்த பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாயம்; மாணவர்கள் அச்சம் !!

முத்துப்பேட்டை அடுத்த தொண்டியங்காடு கிராமத்தில் கஜா புயலால் உருக்குலைந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் பள்ளி மாணவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இந்த பள்ளியில் கூலித் தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் ஆகியோரின் பிள்ளைகள் 50 க்கும் மேற்பட்டோர் இங்கு பயின்று வருகின்றனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலின் கோர தாண்டவத்தால் இந்தப் பள்ளிக்கூடம் மிகவும் சேதம் அடைந்தது. இன்று வரை அதிகாரிகள் இந்த பள்ளிக்கூட கட்டிடத்தை சரி செய்து தரவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

இப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு மிகவும் அச்சத்துடன் அனுப்பி வைக்கின்றனர். எனவே தாமதப்படுத்தாமல் விரைந்து இப்பள்ளி கட்டிடத்தை சரி செய்து தரும்படி மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.