புதுமனை தெருவில் மணல் கொட்டி சரி செய்யப்பட்ட சாலை, மழை நீர் தேங்கி மேலும் மோசமடைந்த அவலம்..!

முத்துப்பேட்டை 5வது வார்டு புதுமனைத் தெரு, சிதம்பரம் ராம ஜெயம் திருமண மண்டபத்தின் நுழைவு வாயிலில் உள்ள முக்கியச் சாலை மிக மோசமாக உள்ளது.

இந்த சாலை கடந்த சில நாட்களுக்கு முன்பு மணல் கொட்டி, பள்ளங்கள் மூடப்பட்டு சரி செய்யப்பட்டது. இதனை முறையாக செய்யாத காரணத்தினால் மழைநீர் ஓட வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

மழைநீர் மற்றும் சாக்கடை நீர், குப்பையுடன் கலந்து தேங்கி நிற்பதால் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசி வருகிறது. அப்பகுதி மக்களுக்கு அது பொதுவான சாலை என்பதால் வாகன ஓட்டிகளும், பள்ளி மாணவர்களும் மிக சிரமத்திற்கு மத்தியில் அப்பகுதியை கடக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக, கொசு தொல்லை அதிகம் இருப்பதாகவும், மேலும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தச் சாலையை முறையாக சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.