இந்த கோடைக்கு சுற்றுலா போகணுமா?? அப்போ இங்க வாங்க..

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் (லகூன்)சதுப்பு நில காடுகள்…

ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் சேறு கலந்த சதுப்பு நிலங்களில் அலையாத்தி காடுகள் வளர்கின்றன. கோரையாறு, பாமணி ஆறு, வளவனாறு, கிளைதாங்கி ஆறு, நசுவினி ஆறு, பாட்டுவனாச்சி ஆறு, கண்டபறிச்சான்கோரையாறு, மரைக்காகோரையாறு ஆகிய ஆறுகள் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடலில் கலக்கும் ஆழமற்ற பகுதி லகூன் எனப்படுகிறது. இங்கு வளரும் காடுகள் தான் அலையாத்தி காடுகள். கழுதை முள்ளி, நரிக்கண்டல், வெண்கடல், பன்னுக்குத்தி, கருங்கண்டல், சிறுகண்டல், தில்லை, திப்பரந்தை, நெட்டை, சுரப்புன்னை, குட்டை சுரப்புன்னை, மலட்டு சுரப்புன்னை, சோமுந்திரி, சோனரேசியா எபிடெலா உள்ளிட்ட மரங்கள் வளர்கின்றன. சாம்பல் நிறத்தில் இருக்கும் இம்மரங்கள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை பூக்கும் தன்மை கொண்டவை.

நாட்டில் உள்ள அலையாத்தி காடுகளில் 61 சதவீத காடுகள் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதிகளை உள்ளடக்கிய லகூன் பகுதியில் 29,713 ஏக்கரில் பரந்துவிரிந்துள்ளது. அலையாத்தி காடுகளை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள். பேட்டை, ஜாம்புவானோடை போன்ற பகுதிகளில் இருந்து மீனவர்களின் படகு மூலம்தான் சென்று சுற்றிப்பார்க்க வேண்டும். 7 கிலோ மீட்டர் தொலைவு ஆற்றில் செல்லும்போது இருபுறமும் இருக்கும் அலையாத்தி காடுகள் கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கும். பார்வை கோபுரங்களில் ஏறி லகூன் அழகை காணலாம். யாழ்பாணத்தான்கோரி, சீப் கார்னர், செல்லிமுனை பார்வை கோபுரங்கள், நடுவாய்க்கால், உப்புத்தோட்டம், வவ்வால் தோட்டம் ஆகியவை பார்க்க வேண்டிய இடங்கள்.

போக்குவரத்து வசதி:

திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக பட்டுக்கோட்டை சென்று அங்கிருந்து முத்துப்பேட்டை செல்லலாம். திருச்சியில் இருந்து ரயில் மார்க்கத்திலும் செல்லலாம். முத்துப்பேட்டையில் இருந்து லகூன் செல்ல படகு ஒன்றுக்கு (10 பேர் செல்லலாம்) ரூ.800 முதல் 1000 வரை வசூல் செய்யப்படுகிறது.