“மக்களை தற்போது அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிபா வைரஸ்” மக்கள் பீதி…

மக்களை தற்போது அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ‘நிபா’ வைரஸ் எங்கிருந்து எப்படி பரவியது?

◾பழம் திண்ணி வவ்வால்கள், மர நரிகள் போன்ற காட்டு உயிரினங்களில் வாழும் ஒரு வைரஸே ‘நிபா’வைரஸ் ஆகும். இது ஹெபினா வைரஸ் என்ற இனத்தில், பேரமிக்ஸோவிரிடே குடும்பத்தைச் சார்ந்தது. ‘நிபா’வைரஸ் வசிக்கும் காட்டு உயிரினங்கள் நகரத்திற்கு வரும் போது, அங்குள்ள மனிதர்களின் ஆடு, நாய், பூனை, குதிரை போன்ற வளர்ப்புப் பிராணிகளுக்கு அவற்றின் கழிவுகளில் இருந்து இது பரவுகிறது. பின்னர் வளர்ப்புப் பிராணிகளிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவுகிறது.

◾கடந்த 1998, 99 ஆம் ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூரில் இந்த வைரஸ் தொற்று முதன்முறையாகக் கண்டறியப்பட்டது. மலேசியாவின் ‘நிபா’ கிராமத்தில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டதால்தான் இதற்கு ‘நிபா’ வைரஸ் என்ற பெயரே வந்தது. மலேசிய காடு அழிப்பே அதன் காரணமாகக் கூறப்பட்டது. எளிதில் தொற்றும் ‘நிபா’ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் ‘நிபா’வைரஸ் பாதிப்புக்கு மருந்து இல்லை. தடுப்பூசியும் இல்லை. அதனால் நோய் பரவுவதைத் தடுக்க பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது அவசியம்.

◾காய்ச்சல், தலைவலி, மயக்கம் என்று ஆரம்பித்து தாக்கிய சில நாட்களிலேயே கோமா, மரணம் என ஆளைக் கொள்ளும் கொடூர வைரஸ் ‘நிபா’.நிபாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் பிழைக்க 30% வாய்ப்புகள் மட்டுமே உள்ளதாக உலகச் சுகாதார நிறுவன ஆய்வுகள் கூறுகின்றன.

◾கேரளத்தில் வேகமாகப் பரவும் நிபா வைரஸ் காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் இருக்க, சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் துரிதமாக இறங்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது..